‘உடான்’ (UDAN) திட்டம்-2-ன் கீழ் நிதியுதவி மற்றும் ஆதரவைப் பெற சேலம் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உடான் 5.0 திட்டத்தின் கீழ், அலைன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சேலம்–பெங்களூரு மற்றும் கொச்சி வழித் தடங்களிலும், இண்டிகோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சேலம்–பெங்களூரு மற்றும் ஹைதராபாத் வழித் தடங்களிலும் 2023-ம் ஆண்டு முதல் விமானச் சேவைகள் தொடங்கப்பட்டன.
அந்த திட்டத்தின் அப்போதைய விதிமுறைகளின்படி, சாத்தியக்கூறு இடைவெளி நிதி (VGF) உதவியுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு உட்பட்டு, செயல்பாடுகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகள் வரை மட்டுமே இந்த சேவைகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால், இதற்கான ஆரம்பக்கட்ட சேவைக்கான மூன்றாண்டு காலம் அக்டோபருடன் நிறைவுற்றது.
எனினும், ஜூலை 4-ல் தொடங்கப்பட்ட புதிய 10 ஆண்டுகால உடான் திட்டத்தின் அடுத்த கட்டம், சேலம் போன்ற குறைந்த அளவே பயன்படுத்தப்படும் விமான நிலையங்களுக்குப் புதிய ஏல நடைமுறை மூலம் மீண்டும் நிதியுதவியும், ஆதரவும் பெற வழிவகுக்கிறது. மேலும், பிராந்திய வான்வழிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதுப்பிக்கப்பட்ட கொள்கை விதிகளின் கீழ் சேலம் விமான நிலையத்தை இணைக்கும் தகுதியுள்ள புதிய ஏலங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.